எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

Update: 2022-03-15 15:00 GMT

பைல் படம்.

நாமக்கல் நகரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, கொண்டிசெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் சரவணக்குமார். இவர் நாமக்கல் மாவட்டம், எஸ்.புதுப்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோயமுத்தூரில் சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது குடும்பத்தினர் பெயரில் அரசு கட்டுமானப் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்து பல்வேறு கான்ட்ராக்ட்களை பெற்று பணிகளை செய்துள்ளார். இந்த நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான நபர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, நாமக்கல் ஆசிரியர் சரவணக்குமார் வீட்டிலும் இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வந்தனர்.

அப்போது அவரது வீடு பூட்டி இருந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் வெளியூரில் இருப்பதாகவும், மாலையில் நாமக்கல் வந்து விடுவதாகவும் கூறினார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே பிற்பகல் 3 மணி அளவில் சரவணக்குமார் கொண்டிசெட்டிப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் 4 பேர் உடனடியாக சோதனைக்கு வந்தனர். இவர்கள் சரவணக்குமார் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News