இலவச பயிற்சி வகுப்பில் படித்த 60 பேர் அரசுப் பணிக்கு தேர்வு : ஆட்சியர் பெருமிதம்

இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த 60க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2024-01-20 02:45 GMT

ராசிபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த 60க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறியல் கல்லூரியில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், பல்வேறு கல்வித்தகுதி உடைய 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 22-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான 32 நபர்களை தேர்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், ராசிபுரம், நாமக்கல், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளிலும், மோகனூர், பட்டணம் பேரூராட்சிகள் என 5 இடங்களில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகங்களில் மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் வகையில் அதற்குரிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவர்களுக்கு அமைதியான சூழலில் பயில்வதற்கு தேவையான சிறப்பான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவுசார் மையம் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மேலும் அங்கு இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்களும் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பயின்ற மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் 22 பேரும், குரூப் 2 தேர்வில் 13 பேரும், போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் 12 பேரும், போலீஸ் பணியிடத்திற்கு 13 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News