தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் 4 முதல்வர்கள்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

தமிழகத்தை, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என 4 முதல்வர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் என, தேர்தல் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2024-04-13 03:15 GMT

திருச்செங்கோட்டில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் தமிழ்மணியை அறிமுகம் செய்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தை, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என 4 முதல்வர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் என, தேர்தல் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அ.தி.மு.க, வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து, திருச்செங்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாமக்கல் லோக்சபா தொகுதியில், 2 இடங்களில் நடந்த பொதுக்கட்டத்தை பார்த்தால், மாநாடு போல் உள்ளது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நியாயம், தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு மக்கள் இருப்பார்கள். அதனால், வெற்றி நம் பக்கம் உள்ளது. நாட்டிற்கு ஒரு முதல் அமைச்சர்தான் தேவை. ஆனால், தமிழகத்தில், தி.மு.க, குடும்ப ஆட்சியில் 4 முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என 4 முதல்வர்கள் ஆட்டிப்படைக்கின்றனர். அதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியை, இன்றயை 3 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடுமையான விலைவாசி உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சி மக்களாட்சி. தி.மு.க., ஆட்சி அதிகார ஆட்சியாக உள்ளது. இப்போது எங்குபார்த்தாலும் கொள்ளை, கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றுமுதல் இன்றுவரை சட்டம் ஒழுங்கு அடியோடு தமிழகத்தில் கெட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முதியோர்களை குறிவைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை ஒரே மாதிரி கொலை செய்துள்ளனர். இது வரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாத கையாளாகதா ஆட்சியாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும். சட்டம் ஒழுங்கு கெட்டு போனால், பின்னுக்கு தள்ளப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்குசரியாக இருந்தது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. விடியா தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க, ஆட்சியில், 7 பாலியல் வழக்குகள் பதியப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் 52 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. விடியா தி.மு.க., ஆட்சியில், தொழில் செய்வதே சிரமமாக உள்ளது.

நாமக்கல்லில் கோழி, முட்டை உற்பத்தி அதிகம் உள்ளது. தீவனத்திற்கான மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணைக்கான தீவனம் விலை உயர்வதை விடியா தி.மு.க., ஆட்சி தடுக்கவே இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில், தொழிலுக்கு பாதிப்பு வரும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அதை சரி செய்ய வழி செய்தோம். கடந்த 6 மாதங்களில் அரிசி விலை, கிலோ ஒன்றுக்கு ரூ. 15 உயர்ந்துள்ளது. பருப்பு, எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. நல்ல முதல்வர் இல்லை என்றால் இப்படிதான் நடக்கும். மீண்டும் அ.தி.முக., ஆட்சி வந்தால்தான் சரியாகும். அ.தி.மு.க., ஆட்சியில், தாலிக்கு தங்கம், ஏழை பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. அதையும் நிறுத்தி விட்டனர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ரூ. 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கினோம். அதையும் நிறுத்தி விட்டனர்.

2010ல், காங்., தி.மு.க., கூட்டணி ஆட்சியில், நாமக்கல்லை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் நீட் தேர்வை கொண்டு வந்தார். ஆனால், தற்போது, நாடகமாடுகின்றனர். 2017 ல், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம். அதன் மூலம் தற்போது, 2,160 மாணவர்கள் மருத்துவம், படிக்கின்றனர். தமிழகத்தில் எங்கும் போதை பொருள் விற்கப்படுகிறது. கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதை கட்டுப்படுத்த ஸ்டாலினால் முடியவில்லை. போதை பொருள் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. தி.மு.க., அயலக அணி நிர்வாகி ஒருவர் வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக வழக்கில் சிறையில் உள்ளார். அவர், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என அப்பா மகன் இருவரும் அவருடன் நெருக்கமாக உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர் கணவர் கள்ளச்சாரயம் தயாரித்து பாரில் விற்பனை செய்வதாக தற்போது செய்தி வந்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டிலும் இந்த விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் சாப்பிட்டு பலபேர் இறந்துவிட்டனர். விபத்தில் காயமடைந்தால் பணம் தரமாட்டார்கள். கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்தால் ரூ. 10 லட்சம் வழங்குவார்கள். திருச்செங்கோட்டில், ரூ. 5 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன் அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு, தனி நிதி ஒதுக்கீடு செய்து, கான்கிரீட் வீடு அமைத்து தருவோம் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், பொன் சரஸ்வதி, ஜெ., பேரவை செயலாளர் சந்திரசேகர், தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News