காவிரி ஆற்றில் துர்நாற்றம்..!
காவிரி ஆற்றில் துர்நாற்றம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
பள்ளிபாளையம் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக நீரில் கலந்துள்ள ரசாயன கழிவுகள் , தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்து படர்ந்துள்ளன. இதனால் ஆற்றங்கரையோரங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்த்திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆற்றுநீர் மாசடைதல்
ஓடப்பள்ளி கதவணையின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் தேங்கியுள்ளது. ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனைகள், நகராட்சி சாக்கடைகளின் கழிவுகள் அனைத்தும் காவிரி ஆற்றில் தேங்கியுள்ளதால், காவிரி ஆறு தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது.
சாயச்சாலைகளின் கழிவுகள்
பள்ளிபாளையம் சாயச்சாலைகள் இரவு பகலாக தொடர்ந்து இயங்கி, திருப்பூர் பெருநிறுவனங்களின் பனியன் துணிகளுக்கு வின்ஞ், ஜிகர் போன்ற கனரக இயந்திரங்களை பயன்படுத்தி கட்டுக்கடங்காத கழிவுகளை வெளியேற்றி வருகின்றன.
சுகாதார கேடு அபாயம்
இதனால் காவிரி கரையோரங்களில் வாழும் மக்களுக்கு பெரும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வரும், சாயக்கழிவுகளை சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக கூட நிறுத்தாமல் அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் காப்பதால், ஆற்றுநீர் முழுமையாக கெட்டு வருகிறது.
15 ஆண்டுக்கு முன் நிகழ்வு
15ஆண்டுக்கு முன் குடிநீருக்காக போராடிய மக்களை கலைக்க தடியடி நடத்தி கலைத்த வரலாற்று நிலைக்கு, பள்ளிபாளையம் தள்ளப்பட்டுவிடும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத சட்டவிரோத சாயச்சாலைகளை பாரபட்சம் இல்லாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.