பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு அக்ரஹாரம் பஞ்சாயத்து மக்கள் கலெக்டரிடம் மனு
பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.;
பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மனு அளிப்பதற்காக, திரளான அக்ரஹாரம் பஞ்சாயத்து பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்தனர்.
பள்ளிபாளையம் நகராட்சியுடன் அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தமிழக அரசு, சில மாதங்களுக்கு முன்பு, கிராம பஞ்சாயத்துக்களை அருகில் உள்ள நகராட்சி, மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களுடன் இணைத்து, உத்தரவு வெளியிட்டது. இதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி, காடச்சநல்லூர், சமயசங்கிலி, அக்ரஹாரம், தட்டாங்குட்டை ஆகிய கிராமங்கள், பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதுப்பாளையம் கிராம பஞ்சாயத்து, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து, முற்றுகை போராட்டம், காத்திருப்பு போராட்டம், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஞ்சாயத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஞ்சாயத்து அதிக பரப்பளவும், அதிக மக்கள் தொகையும், அதிக விவசாய நிலங்கள் கொண்ட பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. இங்குள்ள மக்கள், பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள். இப்பகுதியில் வயதானர்கள், ஏழை எளிய மக்கள் அதிகம் நிறைந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஞ்சாயத்தை, பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசால் அறிவிக்கப்படும் வரி இனங்கள் செலுத்தவும் சிரமமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இலவச வீடுகள் பெறுவதற்கும், கூலி தொழிலாளர்களாகிய நாங்கள் மிகவும் பாதிப்படைவோம். இதனால், பஞ்சாயத்தில் உள்ள கூலி தொழிலாளர்களாகிய எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும், கிராமப்புற விவசாயிகளுக்கான சலுகை அனைத்தும் கிடைக்காமல், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யும் நாங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும், எங்களின் அன்றாட தேவைக்கான, 100 நாள் வேலை தொடர்ந்து கிடைக்கவும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பஞ்சாயத்தை, பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதை தவிர்த்து, தொடர்ந்து கிராம பஞ்சாயத்தாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.