ரம்மி விளையாட்டு சோகம், 70 லட்சம் இழப்பு, லாரி ஓட்டுனர் தற்கொலை, உறவினர்கள் சாலை மறியல்
குமாரபாளையத்தில் ரம்மி விளையாட்டில் 70 லட்சம் இழந்ததால் லாரி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
ரம்மி விளையாட்டு சோகம், 70 லட்சம் இழப்பு, லாரி ஓட்டுனர் தற்கொலை, உறவினர்கள் சாலை மறியல்
குமாரபாளையத்தில் ரம்மி விளையாட்டில் 70 லட்சம் இழந்ததால் லாரி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே காந்தி நகர், சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் தமிழ்மணி, 39. லாரி ஓட்டுனர். மொபைல் போனில் ரம்மி ஆடும் வழக்கம் கொண்டவர். இது இவரது குடும்பத்தாருக்கு சில நாட்கள் முன்புதான் தெரியவந்தது. இரு நாட்கள் முன்பு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அன்று இரவு 08:00 மணியளவில் ஒரு போன் வந்துள்ளது. அதை பேசியவாறு வெளியில் சென்றுள்ளார். இரவு 10:00 மணியளவில் மனைவி யசோதா, 36, கேட்டபோது, லாரி பட்டறையில் உள்ளதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் கூற, யசோதா மற்றும் இரு மகன்கள் தூங்கி விட்டனர். நேற்றுமுன்தினம் அதிகாலை 04:00 மணிவரை வராததால், மகன் பிரேமை எழுப்பி, நேரில் போய் பார்த்து வர சொல்லியுள்ளார்.
நேரில் சென்ற பிரேம், அம்மாவுக்கு போன் செய்து, கோட்டைமேடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள மரத்தில் கயிற்றினால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருப்பதாக கூற, யசோதா உள்ளிட்ட உறவினர்கள் நேரில் வந்து, தமிழ்மணியை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.
இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இவரிடம் உள்ள போனில், என் சாவுக்கு காரணம், நித்தியபிரகாஷ், பாலாஜி, விஜயகுமார் என்றும், ரம்மி விளையாட்டில் 70 லட்சம் வரை விட்டு விட்டேன், எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை என்று வீடியோ பதிவு செய்து இருந்தார். இது குறித்து யசோதா குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்மணியின் உடலை வாங்க மறுத்து, நேற்று மாலை 01:30 மணியளவில் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி நேரில் வந்து, இறந்த தமிழ்மணியின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதனால் சாலைமரியலை கைவிட்டனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே ரம்மி விளையாட்டில் 70 லட்சம் வரை பணம் இழந்து, தற்கொலை செய்து கொண்டதால், இவருக்கு சாவுக்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து சாலையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.