நகராட்சி கமிஷனர் மீது அ.தி.மு.க. கவுன்சிலர் போலீசில் புகார்

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் மீது அ.தி.மு.க. கவுன்சிலர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Update: 2022-06-14 15:45 GMT

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் மீது அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியிடம் புகார் மனு கொடுத்தார்.

குமாரபாளையம் நகர அ.தி.மு.க. செயலரும், 30வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலருமாக இருந்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று நகராட்சி கமிஷனர் விஜயகுமாரை வார்டு பிரச்சனை சம்பந்தமாக பேச அவரது அறைக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அலுவலக உதவியாளர் கதவை திறந்து விட உள்ளே சென்றேன். அப்போது கமிஷனர் யார்? உன்னை உள்ளே வரச்சொன்னது? வெளியே போகிறாயா? இல்லையா? நானே வெளியே இழுத்து விடவா? கவுன்சிலர் பதவியிலிருந்து உன்னை தூக்கி விடுவேன், பார்க்கிறாயா ? என கூறினார். நகர்மன்ற கூட்டத்தில் என்னை பற்றி பேசுகிறாயா? என அவமரியாதையாக பேசி வெளியே அனுப்பி விட்டார்.

நகரமன்ற கூட்டத்தில் கமிஷனர் ஒப்பந்ததாரர்களிடம் அதிக லஞ்சம் கேட்கிறார் என கூறியிருந்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு இதுபோல் சுயேச்சை தலைவர் தூண்டுதலின் பேரில் நடந்து கொள்கிறார். இது குறித்து போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளேன். அ.தி.மு.க. தலைமை அலுவலகம், முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து, நகராட்சி கமிஷனர் செயலை கண்டித்து பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனு கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு பாலசுப்ரமணி தனது ஆதரவாளர்களுடன் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் புருஷோத்தமன், நாகநந்தினி, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News