குமாரபாளையத்தில் ஊட்டச்சத்து கரைசல் வழங்கிய நகராட்சி சுகாதாரத்துறை
குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் எனும் நீர்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:-
கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியர்வை மூலம் உடலில் உள்ள நீர் அதிகம் வெளியேறி விடுவதால் மிகவும் சோர்வாகி விடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு, பல நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் எனும் நீர்சத்து அதிகரிக்கும் பானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த கரைசல் ஆகும். இந்த கரைசல் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்படும்.
நாமக்கல், சுகாதார பணிகள், துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் பேரில், எலந்தகுட்டை, அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மனோகரன் தலைமையில், குமாரபாளையம் நகரில் பஸ் ஸ்டாண்ட், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கப்படுகிறது. பகல் 11:00 மணி முதல் மாலை 04:00 வரையிலான நேரம் தான் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த ஓ.ஆர்.எஸ். கரைசலை பருகி, நீர்சத்து குறைபாட்டினை போக்கி கொள்ள வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பிரபுகுமார், குமாரபாளையம் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. ஜான்ராஜா, சந்தானகிருஷ்ணன் உள்பட பலரும் பங்கேற்றனர்.