குளித்தலையில் சாலை வசதி கோரி சாலை மறியல்

குளித்தலை அருகே சாலை வசதி இல்லாததால் மழை தேங்கியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-06 11:30 GMT

அடிப்படை  வசதி கோரி  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

 குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கம்பட்டியில் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக முறையான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவல்லை  எனக் கூறப்படுகிறது.

பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டி கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆறு நாட்களுக்கும் மேலாக தெருக்களில் செல்ல முடியாமல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று அய்யர்மலை முதல் பெட்டவாய்த்தலை வரை செல்லும் சாலையில் பணிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.     

தகவலறிந்த மருதூர் பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் சம்பத் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை  வெளியேற்றுவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாகவும் தொடர்ந்து மழை நின்ற பிறகு பகுதிக்கு அனைத்து வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்வதாக சமாதானப்படுத்தினர்.

 இதையடுத்து  அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  இதனால்,  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில்  போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது.

Tags:    

Similar News