கரூரில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

மாவட்ட ஊராட்சியில் இன்று நடைபெற இருந்த துணைத் தலைவர் தேர்தல் உறுப்பினர்கள் யாரும் வராத காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2021-11-29 12:30 GMT

உறுப்பினர்கள் யாரும் வராத காரணத்தால் வெறிச்சோடி கிடக்கும் மாவட்ட ஊராட்சி அலுவலகம்.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக இரண்டு கட்சி உறுப்பினர்களும் வராத காரணத்தால் துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்ட ஊராட்சி தேர்தலில் அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதன் காரணத்தால் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளை அதிமுக உறுப்பினர்களே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், அதிமுக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 8 வது வார்டு உறுப்பினரும், துணைத் தலைவருமான முத்துக்குமார் தனது உறுப்பினர் பதவி ராஜினாமா செய்துவிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்

இதனால், காலியாக இருந்த 8 வது வார்டுக்கு இடைத்தேர்தல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதன் காரணத்தால் கரூர் மாவட்ட ஊராட்சி திமுக உறுப்பினர் பலம் 4 ஆக உயர்ந்த்து. அதிமுகவின் உறுப்பினர் பலம் 8 ஆகவும் குறைந்தது.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.இதனால் திமுகவின் பலம் தற்சமயம் 6 ஆக உயர்ந்துள்ளது. அதிமுகவின் பலம் 8 லிருந்து 6 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று மாவட்ட ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே சம பலத்தில் இருப்பதால் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற பலத்த பரபரப்பு ஏற்பட்டது.

பிற்பகல் 2.30 மணி அளவில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி ஈஸ்வரி அறிவித்திருந்தார்.  2  மணிக்கே தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் வந்து காத்திருந்தனர். மூன்று மணி வரையிலும் அதிமுக உறுப்பினர்கள் திமுக உறுப்பினர் யாரும் மாவட்ட ஊராட்சி அலுவலகம் பக்கம் வரவில்லை. இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

Tags:    

Similar News