பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு; கரூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தகவல்

Karur News , Karur News Today- பள்ளிகளில், காலை நேரங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டது என, கரூர் மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-04-01 16:08 GMT

Karur News , Karur News Today- கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Karur News , Karur News Today- கரூர் மாநகராட்சியில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நேற்று காலை நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார். துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் கவிதா கணேசன் கரூர் மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பீடு அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கரூர் மாநகராட்சியின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.311 கோடியே 4 லட்சத்து 46 ஆயிரம், செலவு ரூ.313 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், கரூர் மாநகராட்சியில் 2023-24 நிதியாண்டில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்ற விவரங்கள்;

கரூர் மாநகராட்சி சணப்பிரட்டி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் மற்றும் கரூர் மற்றும் இனாம் கரூர் பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.116 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. 15-வது மத்திய நிதிக்குழு மானியம் திட்டம் 2022-23-ல் எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகள் ரூ.6 கோடி. மண்சாலைகளை ரூ.15 கோடியில் தார்சாலைகளாக மாற்றி அமைக்கப்படுகிறது. திருவள்ளுவர் மைதானம் மேற்கு பகுதியில் புதிய மாவட்ட நூலகம் ரூ.6 கோடியே 90 லட்சத்தில் கட்டப்படுகிறது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தாந்தோணி பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருந்த இடத்தில் ரூ.5 கோடியில் பணிபுரியும் பெண்களுக்கு விடுதி கட்டுவது, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியே 93 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி. பொதுநிதி - பூங்காக்கள் மேம்பாட்டு பணி (2 எண்கள்) ரூ.2 கோடி. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிவறை மற்றும் சமுதாய கழிவறை கட்டுவதற்கு ரூ.1 கோடியே 50 லட்சம். தாந்தோணிமலை பகுதியில் 2023-24-ல் எல்பிஜி மின்மயானம் கட்டுவது ரூ.3 கோடி.,மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் செய்ய ரூ.10 கோடி.

கல்வி நிதியின் கீழ் கரூர் மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்கும் பணி ரூ.7 கோடியே 48 லட்சம். கரூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ரூ.1 கோடி என்பன உள்பட பல்வேறு வகையான வளர்ச்சி பணிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாநகராட்சி கூட்டத்திற்கு காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு கருப்பு சட்டை அணிந்து வந்து, தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.

Tags:    

Similar News