கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு

புரட்டாசி மாதத்தையொட்டி, தென் திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலை பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

Update: 2021-09-18 09:45 GMT

தான்தோன்றிமலை கோயிலை சுற்றிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தென் திருப்பதி என அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி தேர் திருவிழா ரத்து  செய்யப்பட்டுள்ளது.  கோயிலை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த ஆண்டு புரட்டாசி தேர்த்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாதம் பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் மற்றும் முடிக்காணிக்கை செய்ய அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது. புரட்டாசி மாதம் நேற்று துவங்கிய நிலையில் முதல் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள வாசல்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் வாசலில் நின்று வழிபட்டு செல்கின்றனர்.

மேலும், முடி காணிக்கை செலுத்த அனுமதி இல்லாத நிலையில், பக்தர்களுக்கு முடி காணிக்கை செலுத்தும் டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் தெரிவிக்கையில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முடி காணிக்கை செலுத்தும் பணியை தொடர்வதாக தெரிவித்தனர். பிரதி திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கோவிலில்  தரிசனம் செய்திடவும் முடிக்காணிக்கை செலுத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News