பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து தொழிற் சங்கங்கள் ஆர்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக செப். 27 ல் நடைபெற உள்ள பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து தொழில் சங்கங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.

Update: 2021-09-23 12:11 GMT

பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து கரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழில்சங்கங்கள்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 27ஆம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து,  கரூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

  தில்லியில்  3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 27 ம் தேதி பாரத் பந்த் நடைபெற உள்ளது.       இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் மத்திய தொழில் சங்கங்களின் சார்பில் கரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு  இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   

ஆர்பாட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை நீக்க வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரியை குறைக்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு சுங்கவரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பெகாசஸ் உணவு செயலி பயன்படுத்தப்பட்டது குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கி ஊதியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும். நகர்புறங்களுக்கு அந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.      கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் உள்ள தில்லுமுல்லுகளை நீக்க வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி விரைவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பொய் வழக்கு போட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News