மு.க. ஸ்டாலின் முக தோற்றத்தை பட்டுச்சேலையில் வடிவமைத்த நெசவாளி தம்பதியினர்

மு.க. ஸ்டாலின் முக தோற்றத்தை பட்டுச்சேலையில் காஞ்சிபுரம் நெசவாளி தம்பதியினர் வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-05-17 11:52 GMT

குமரவேல் மற்றும் கலையரசி நெசவாளி தம்பதியினர்.

பட்டு நகரமாம் காஞ்சிபுரத்தில் இன்றளவும் புகழ்பெற்ற சேலைகளை நெசவாளர்கள் நெய்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த நெசவாளர் சீனிவாசன் மகன் குமரவேல்(36) இவரது மனைவி கலையரசி(32) எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இவர்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முகத்தோற்றங்களை பட்டுச்சேலையில்  வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து குமரவேல் கூறும்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் என்பவரிடம் தி.மு.க. பிரமுகர் ஒருவர் பட்டுச்சேலையில் தமிழக முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்து தரும் வகையில் நெசவாளர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டுள்ளார்.

அதன்படி என்னைத் தொடர்பு கொண்டார்.தக்காளி நிற பட்டுச் சேலையில்,தூய தங்க ஜரிகையில்,12 முழம் நீளத்திலும், இரண்டே முக்கால் முழம் அகலத்திலும் ஒரு பட்டுச் சேலையை  நானும் எனது மனைவியும் நெய்தோம்.இதில் சிறப்பு என்னவென்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட அவரும் நானும் என்ற புத்தகத்தின் முன்பக்க அட்டைப் படத்தை சேலையின் முந்தானையிலும்,புத்தகத்தில் உள்ள வாசகங்களை சேலையின் உடல் முழுவதும் இருக்கும் வகையிலும் வடிவமைத்தோம்.

எனது தலைமையில் 4 பேர் இணைந்து தொடர்ந்து 2 மாதங்கள் உழைத்து இப்பட்டுச்சேலையை உருவாக்கினோம். சேலை பாடர் முழுவதும் அவரும்,நானும் என்ற எழுத்துக்கள் மட்டும் வரிசையாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.இதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி வெளியான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தை வெண்பட்டு வேட்டியின் கரையாகவும்,உங்கள்தொகுதியில் ஸ்டாலின் குரல் என்ற வாசகங்கள் உள்ள வெண்பட்டு அங்கவஸ்திரமும் வடிவமைத்தோம்.நாங்கள் உருவாக்கிய கைத்தறி பட்டுச் சேலையை அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பக்தர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி திருப்பாவையின் 30 பாசுரங்களும் அடங்கிய பாடல்வரிகளை சேலையின் உடலில் நெய்து கொடுத்துள்ளோம் என்றார்.


Tags:    

Similar News