காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவிக்கபட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-21 07:30 GMT

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவிக்கபட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி (Hand Sanitizer) வைக்கப்படவேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை IR Thermometer கருவி மூலம் கண்காணிக்க வேண்டும்.

பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் (AC) பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதையும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை (Precautionary Dose) தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் (காய்ச்சல், தொண்டை வலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால்) மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அனுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News