முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-17 05:30 GMT

காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  கடந்த சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத மழை பெய்து, ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோர பகுதியில் அமைந்துள்ள குடிநீர் இணைப்பு அனைத்தும் சேதமடைந்து,  காஞ்சிபுரம் நகர் மற்றும் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காத பகுதிகளில்,  லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு  குடிநீர் வழங்க அறிவுறுத்தபட்டது. அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு,  மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில்,  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெருவில், ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என, அப்பகுதி பெண்கள் 20க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் திடீர்  மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி வழியாக வந்த,  தனிப்பிரிவு ஆய்வாளர் பிரபாகரன்,  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்து, மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News