புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன் போராட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நசரத்பேட்டை பகுதியில் பழமையான ஸ்ரீ புவனகிரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

Update: 2023-03-20 11:45 GMT

பெரியார் நகர் ஸ்ரீ புவனகிரி அம்மன் ஆலயத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி அதனை இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்க கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளி லட்சுமி.

காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே உள்ள புவனகிரி அம்மன் திருக்கோயில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாக கூறி அதனை இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்க கோரி குடும்பத்துடன் துப்புரவு ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நசரத்பேட்டை பகுதியில் சென்னை செங்கல்பட்டு சாலையில் பழமையான புவனகிரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்திற்கு சொந்தமாக நாலு ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதனை குத்தகைக்கு விடப்பட்டும் , பக்தர்களின் காணிக்கையை கொண்டு அம்மன் திருக்கோயில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்திரு கோயிலில் கடந்த 20 வருடங்களாக கன்னியம்மாள் என்பவரும் அவரைத் தொடர்ந்து அவருக்கு தங்கை லட்சுமி என்பவரும் திருக்கோயில் துப்புரவு பணியில் பணிபுரிந்து வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துப்புரவு பணி மேற்கொண்டு இருந்த லட்சுமி என்பவரை கோயில் நிர்வாக குழு என கூறப்படும் நபர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி மற்றும் அவரது அக்கா, மகள் நீலா மற்றும் பேத்தியுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் அருகே வாசலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து அவரது பேத்தி கூறுகையில், திருக்கோயிலில் 10 பேர் கொண்ட குழுவினர் ஒருங்கிணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பக்தர்கள் தரும் காணிக்கை மற்றும் அபிஷேக கட்டணம் உள்ளிட்டவைகளை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டும் திருக்கோயிலை பாழ்படுத்தி வருவதாகவும் இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை எனவும் , இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இந்து சமய அறநிலை துறை என பல இடங்களில் கூறியும் எவ்வித பலனும் இல்லை என தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இழிவாக பேசிய நபர்கள் மீது புகார் அளிக்க அறிவுறுத்தி புகாரை மகளிர் காவல் நிலையம் மூலம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.

இப்போராட்டம் குறித்து அக்கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, கோயிலுக்கும் வரும் பக்தரிடம் தனிப்பட்ட முறையில் பணம் கேட்டு வற்புறுத்தி வருவதாகும், அவர்கள்அளிக்காத நிலையில் அவர்களை வசை பாடுவதாக பக்தர்கள் தெரிவித்த புகாரின் பேரிலே அவரை பணி நீக்கம் செய்யப்பட்டார்.

திருக்கோயில் அப்பகுதி கிராம கோயில் என்றும், பரமாரிப்பிற்காக பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இவர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் மனு அளிக்க வந்த நிலையில் அனைவரும் காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி 30 நிமிடம் பரபரப்பாகவே காணப்பட்டது.

Tags:    

Similar News