செவிலிமேடு : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக் காலனி பகுதி பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-20 11:00 GMT

காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை செல்லும் சாலையில்,  காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்திய போலீசார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த செவிலிமேடு மேட்டுக்காலனி பகுதியில்,  126 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக குடிநீரை,  மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்றும்,  முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும்,  அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலரும் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை செல்லும் சாலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அப்பகுதியை சேர்ந்த மோகன் தலைமை வகித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அண்மையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,  குடிநீர் எடுத்துச் செல்லும் பைப்புகளை வெள்ளநீர் இழுத்து சென்று விட்டதால் குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை. விரைவில் குடிநீர் பைப்புகள் புதியதாக போடப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News