செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் பழுது நீக்கம்.. முழுமையாக பராமரிக்க வேண்டுகோள்..

காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது. இருப்பினும், பாலத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-12-08 14:15 GMT

செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் பழுது நீக்கம்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாறு அமைந்துள்ளது. இந்த பாலாற்றின் குறுக்கே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உயர்மட்ட பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் வழியாக செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து வாஙனங்களும் இயங்கி வரும் நிலையில், பால தூண்களின் இணைப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதனால் வாகன விபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி திடீரென பாலத்தின் இணைப்பு பகுதியில் அதிக விரிசல் காணப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

பால இணைப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இருப்பினும், ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை அந்தப் பால இணைப்பு பகுதியில் பழுது நீக்கும் பணிக்கு எந்த நடவடிக்கையும் தொடங்காததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்தப்பகுதியை கடக்கும் நிலை ஏற்பட்டது.

ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்ட பின் தான் அந்த பகுதியில் பழுது நீக்கும் பணியை நெடுஞ்சாலை துறை துவக்குமோ? என பொதுமக்கள் இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்தநிலையில், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று காலை திடீரென சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியை தொடங்கினர். இரு தூண்களுக்கு இடைய இருந்த இரும்பு ராடுகளை முறையாக சரி செய்து பழுத நீக்கினர்.

எதிர்புறத்தில் பேருந்துகள் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டனர். ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த மேம்பாலத்தில் ஆங்காங்கே இருக்கும் பழுதுளையும் நெடுஞ்சாலை ஊழியர்கள் சரி செய்தனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் ஆமை போல் தற்போது பணியை மீண்டும் துவக்கி செய்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும் வகையில் பாலத்தின் முழுமையான பகுதிகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சரி செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News