பாலாறு வெள்ளப்பெருக்கால் கரை ஒதுங்கிய ஹயகிரிவர் உலோகச்சிலை

காஞ்சிபுரம் அருகே பாலாறு வெள்ளப்பெருக்கால் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஹயகிரிவர் சிலை கரையில் ஒதுங்கியது.

Update: 2021-11-25 09:30 GMT

வளதோட்டம் கரையோரம் ஒதுங்கி இருந்த உலோகத்திலான ஹயகிரிவர் சிலையை மீட்ட, வட்டாட்சியர் குழுவினர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் வட்டம்,  வளதோட்டம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட, கமுக்கபள்ளம் கிராமப்பகுதி,  பாலாற்றை கரையை ஒட்டி உள்ளது.

இன்று காலை 11 மணியளவில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர்,  பாலாற்றுக் கரையோரம் சாமி சிலை கிடைப்பதைக் கண்டு, அதை சுத்தம் செய்து வெளியே எடுத்தார். சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டபின், அது உலோகத்திலான ஹயகிரிவர் என அழைக்கப்படும், கல்விக் கடவுளின் சிலை என தெரிய வந்தது. இதுகுறித்து,  கிராம நிர்வாக அலுவலர் அப்துல்பஷீத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அச்சிலை சுமார் ஒன்றரை அடி உயரமும், முக்கால் அடி அகலமும் கொண்டு உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை, தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இச்சிலையினை  அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் லட்சுமி தெரிவித்தார். பாலாற்று வெள்ளத்தில் சிக்கி கரை ஒதுங்கிய உலோக ஹயகிரிவர் சிலை, பார்க்க அழகான வடிவமைப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News