காஞ்சிபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-03-26 02:00 GMT

காஞ்சிபுரம் வெடி விபத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் மற்றும் ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள்.

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனும் தனியார் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பகல் 12 மணி அளவில் தட்பவெப்ப நிலை மற்றும் உராய்வு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டு அப்போது அங்கு பணியில் இருந்த 27 பேர் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான நிலையில் மீதமுள்ள 23 நபர்களை தீயணைப்புத் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு மேலும் ஐந்து நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் மொத்தம் ஒன்பது நபர்கள் உயிரிழந்த நிலையில் அவரது உடல்கள் அனைத்தும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த எட்டு குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி சுதாகர் வழங்கினர்.

மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களை அமைச்சர்கள் அன்பரசன் சிவி கணேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் பாஜக பாமக கம்யூனிஸ்ட் மக்கள் நீதி மையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல்  தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த 19 நபர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜேந்திரன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் இன்று அதிகாலை அதிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகதீசன்  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த இருவரும் இறந்த செய்தி கேட்டு அப்பகுதியினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மீதமுள்ள நபர்களுக்கு அனைவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சையும், இவர்களை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News