சாலைகளை பராமரிப்பதில் மாநகராட்சி அலட்சியத்தால் நெடுஞ்சாலைத்துறைக்கு பாதிப்பு

காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளை பராமரிப்பதில் மாநகராட்சி அலட்சியத்தால் நெடுஞ்சாலைத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் புகார்செய்கிறார்கள்.

Update: 2022-10-20 14:15 GMT

காஞ்சிபுரம் நகரில் மாநகராட்சி சார்பில் புதை வடிகால் அடைப்பு  நீக்குவதற்காக சாலையில் தோண்டப்பட்டு மூடப்படாத பள்ளங்கள். 

காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய தார் சாலைகள் அமைத்தல் சாலைகளை பராமரித்தல்  மற்றும் மேம்பாலங்களில் சேரும் மணல், கற்குவியல்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மூலம் சாலை  போக்குவரத்தில் பாதுகாப்பு பயணம் என்பதை  உறுதி செய்து வருகிறது.

மேலும் காஞ்சிபுரத்தை ஒட்டி உள்ள பல்வேறு சாலைகளில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டும்‌, சாலை ஓரங்களில் மண் சேர்த்து வாகனங்கள் விபத்தில் சிக்கா வண்ணம் பணிகள் மேற்கொண்டும் வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம்பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது.  காஞ்சிபுரம் காந்தி சாலை,  வள்ளல் பச்சையப்பன் தெரு,  பூக்கடை சத்திரம்,  கம்மாளர் தெரு செங்கழுநீர் ஓடை வீதி , ரயில்வே சாலை  உள்ளிட்ட சாலைப் பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு விடுவதால் அதை நீக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மேன் ஹோல் எனப்படும் பகுதியை சுற்றி தடுப்பு  வளையங்கள் அமைத்து அப்பகுதியில் பணிகள் மேற்கொண்ட பின் அதனை ஓரிரு நாட்களுக்குப் பின் மீண்டும் அடைப்பு ஏற்படாத வண்ணம்  அதனை சரி செய்ய பணிகளை செய்வது வழக்கமான ஒன்று.

மேலும் நெடுஞ்சாலை துறையிடம் மாநகராட்சி இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் உள்ளது. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் இப்பணிகளை முடித்த பின்னர்  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால்  சாலை விபத்துக்களில் சிக்கும் நபர்கள் நெடுஞ்சாலை துறையை குறை சொல்வதாகவும்,  இதனால் நாள்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நெடுஞ்சாலை துறை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் பகுதியில் சாலைகளை பராமரிப்பதில் மாநகராட்சி அலட்சியத்தால் நெடுஞ்சாலைத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  அந்த துறை ஊழியர்கள் கூறுகிறார்கள். 

பணிகள் முடிந்த பிறகு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி  தடுப்புகளை அகற்கி அதனை உரிய முறையில் சரி செய்து சாலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர தேவையான பணிகள் செய்ய வேண்டியது மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பு. ஆனால் இதில் அவர்கள் அலட்சியமாகவே இருப்பது நெடுஞ்சாலை  துறைக்கு அதிர்ச்சி அளிக்கிறது.இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள்  இது போன்ற தடுப்புகளை கவனிக்காமல் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இது குறித்து முறையாக தெரிவித்தாலும் இதுவரை அலட்சியமாகவே அனைவரும் செயல்படுவதாக மன வருத்தத்துடன் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்களும் சுகாதார மேம்பாடுகளுக்காக இப்பணியை கடும் பணி சுமையுடன் செய்து வந்தாலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு  கருதி பணிகளை முழுமையாக நிறைவு செய்து வாகன விபத்து இல்லா  மாவட்டமாக திகழ உறுதுணை புரிய வேண்டும் எனவும் அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News