காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராட்சத பலூன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2022-07-18 03:00 GMT

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ராட்சத பலூனை அமைச்சர் அன்பரசன் பறக்க விட்டார்.

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா  ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக ராட்சத பலூனை தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர் , சி.வி எம்.பி.எழிலரசன் , மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் இணைந்து பறக்க விட்டனர்.

சர்வதேச சேஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  குறிப்பாக உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகும், இது நமக்கெல்லாம் பெருமை எனவும் இதனை சிறப்பான முறையில் நடத்திட பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி. எம். குமார் , மண்டல குழு தலைவர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News