அந்தியூர் அருகே மரத்தில் வேன் மோதி விபத்து: சிறுமி உயிரிழப்பு, 10 பேர் காயம்

அந்தியூர் அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-01-01 06:00 GMT

மரத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதை படத்தில் காணலாம். உள்படம் - சிறுமி மகாஸ்ரீ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற வேன் மரத்தின் மீது மோதி விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி, முரளிகாலனி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகள் மகாஸ்ரீ (வயது 3). இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சம்பத்குமார் தனது மகள் மகாஸ்ரீ மற்றும் உறவினர்கள் என மொத்தம் 21 பேர் கொண்ட குழுவினருடன் மேல்மருவத்தூரில்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றார்.

வேனை சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த கௌதம் (வயது 27) என்பவர் ஓட்டி உள்ளார். வேனானது சென்னம்பட்டி முரளிபிரிவு என்ற இடம் அருகே இன்று அதிகாலை 4.45 மணி அளவில் வந்தபோது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சிறுமி மகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும், வேனில் பயணம் செய்த சம்பத்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது வேன் விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கும், அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அந்தப் பகுதியினரும்,  கவிழ்ந்து கிடந்த வேனிலிருந்து பக்தர்களை மீட்டனர்.

பின்னர் , போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி மகாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News