பர்கூர் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-04 04:45 GMT

விபத்துக்குள்ளான லாரிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் மைசூரு சென்று கொண்டிருந்தது. லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வினோத் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

லாரியானது, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர்- கொள்ளோகால் செல்லும் சாலையில் தட்டக்கரை மலைப்பாதையில் நேற்று மதியம் சென்றபோது, அந்த வழியாக மர பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் குடகுமலையில் இருந்து வந்து கொண்டிருந்த டாரஸ் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.


இந்த விபத்தில் லாரியில் இருந்த உர மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் டிரைவர் வினோத் காயம் அடைந்தார். டாரஸ் லாரி டிரைவான அரியலூர் மாவட்டம் மரவலூரை சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதனால் பர்கூர்-மைசூரு ரோடு வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.‌ காயம் அடைந்த வினோத் ராமாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் பர்கூர்-மைசூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News