வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான கூட்டம்..!

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-20 12:45 GMT

வாக்கு எண்ணும் நாளன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டத்தின் போது எடுத்த படம்.

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:-

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படவுள்ளது. இதில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக முகவர்களுக்கான படிவம் எண் 18ஐ முறையாக பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பெறப்பட்டிருக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க இயலாது. வாக்கு எண்ணும் மைய முகவர்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.


வேட்பாளர்கள் வாகனத்தை பயன்படுத்த வேண்டுமெனில் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று வாகன அனுமதி அட்டை பெறப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் 4ம் தேதி காலை 7.30 மணிக்குள் தவறாது ஆஜரில் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணும் அறையில் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று தொடர்புடைய மேசையின் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையை தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்னதாக ஏஆர்ஓ முன்னிலையில் உறுதி மொழி எடுக்க வேண்டும். வாக்கு சாவடி வாரியாக வேட்பாளர்கள் பெறப்பட்ட வாக்குகள் விபரங்கள் Display செய்யப்படுவதனை Counting Supervisor மற்றும் Micro observer பார்வையிட்டு குறிப்பிடுவர் அதனையும் பார்வையிடலாம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது முகவர்கள் அமைதியான சூழலில் இருக்க வேண்டும். வீண்விவாதங்கள், கூச்சலிடுபவர்கள் Counting Supervisor ருடன் தகராறு செய்பவர்கள் உடனடியாக காவல்துறையினர் மூலம் வெளியேற்றப்படுவர்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஏதேனும் ஐயப்பாடோ சந்தேகமோ எழுமாயின் ஏஆர்ஓவின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். அவர் முகவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து முடிவு செய்வார். வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை. மேலும் புகைப்பிடித்தல், மது அருந்திவிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருதல் போன்ற செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 5 வாக்குச்சவாடிகளில் பதிவான வாக்குகள் குறித்த விபரங்கள் விவிபெட் இயந்திரத்தில் விழுந்துள்ள துண்டுச்சீட்டுகள் வேட்பாளர் வாரியாக பிரித்து எண்ணப்படும். அந்த பணிகளையும் முகவர்கள் அமைதியான முறையில் பார்வையிடலாம்.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியிலிருந்து உணவு பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்தில் சட்டம் ஒழுங்கு முறையினை பேணுவதில் முகவர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் நடத்தும் அலுவலருடன் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் பிறப்பிக்கும் சட்டமுறையான கட்டளைகள் அனைத்தையும் வேட்பாளர்கள், முகவர்கள் ஏற்று செயல்பட வேண்டும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணியினை மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு உட்பட்டு விரைந்து செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), ரகுநாதன் (தேர்தல்) உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News