சொத்து வரி உயர்வை குறைத்து அறிவிப்பை வெளியிட தமாகா இளைஞரணி யுவராஜா வேண்டுகோள்

சொத்து வரி உயர்வை குறைத்து அறிவிப்பை வெளியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-10-08 04:15 GMT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா.

சொத்து வரி உயர்வை குறைத்து அறிவிப்பை வெளியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு இவை தவிர பொதுமக்களின் அன்றாட தேவைகளான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திலும் விண்ணை முட்டும் அளவிற்கு விலையை உயர்த்தி பொதுமக்களை துன்பத்திற்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கிறது திமுக அரசு.

மது விற்பனையில் கரைபுரண்டோடும் அளவிற்கு காசு பார்க்கிறது. மணல் கொள்ளை என்பது சூறாவளி கொள்ளையாக மாறிவிட்டது. நியாய விலை கடைகளில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காணாமல் போய்விட்டது. இந்த நிலையில் இப்பொழுது நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தி விட்டு, சில சதவீதம் உயர்த்தியதாக கணக்கு சொல்கிறது திமுக அரசு. நிலம், வீடு, வியாபாரத் தளங்கள் உள்ளிட்டவைகளில் அரசு மதிப்பீட்டு விலை அளவு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த பொருட்களுக்கு அரசின் சொத்து வரி கணக்கிட முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. உரிய கால அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் சொத்துவரிக்கு அபராத கட்டணம் செலுத்தும் முறையை ஆளும் திமுக அரசு அறிவித்துள்ளது. 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என வாக்குறுதி அளித்து விட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்துக்கு 1 சதவீதம் அபராதமும் விதித்துள்ள இந்த திறமையில்லாத திமுக அரசை என்னவென்று சொல்வது?.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை உரிமைகள் காணாமல் போய்விட்டது. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியாகச் சொல்வதை எதையும் நிறைவேற்றுவதில்லை. திமுக கூட்டணி கட்சிகள் பொது மக்கள் நலனுக்காக ஆளும் அரசை எதிர்க்காமல் மௌனம் காத்து வருகிறது. நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று அந்த காலத்தில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட ஒன்று, இரண்டு சீட்டுகளுக்காக வாய் திறக்க மறுக்கிறது.

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மக்கள் படும் துயரங்களை எண்ணுவதில்லை. வாக்களித்த மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராட முன் வர மறுக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆளும் திமுக அரசு உடனடியாக நில மதிப்பீட்டுத் தொகையை அல்லது சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News