சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.;
மணிமேகலா, கோபால்.
சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 43). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா (வயது 40). இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
மணிமேகலா சித்தோடு அருகே வசுவப்பட்டியில் ஒரு மிக்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கோபால் மனைவியை பிரிந்து, வேறு பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், முன்னாள் காதலனான மோகன்ராஜ் என்பவருடன் மணிமேகலா ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதையறிந்த கோபால், செங்குந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு நேற்று சென்று, மகன்களை பார்த்து பேசியுள்ளார்.
பின்னர், நேற்று மதியம் வசுவப்பட்டி சென்ற கோபால், மிக்சர் கம்பெனியில் இருந்த மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதில், சத்தம் போட்டபடி சரிந்த மணிமேகலாவை, பிற தொழிலாளர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, கத்தியுடன் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்த கோபாலை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து மோகன்ராஜுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.