கோபி அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.;
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும். அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா கடந்த 9ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எங்களை அரசியலில் வளர்த்தெடுத்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்கள் இல்லை. மேலும் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால் நான் விழாவுக்கு செல்லவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை என கூறி இருந்தார்.
இந்த நிலையில் கோபி அருகே குள்ளம்பாளையம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திடீரென்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதாவது 2 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.