எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2025-02-10 04:30 GMT

கோபி குள்ளம்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு- அவினாசி திட்ட குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது, அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிற குழுவினர் மூன்று நாட்களுக்கு முன்னா் என்னை சந்தித்தனர். அப்போது, அவர்களிடம் வைத்த வேண்டுகோள் என்னவென்றால், விழா மேடை, விளம்பர பலகையில் எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை.

எங்களிடத்தில் கலந்து இருந்தால் நான் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த இந்த தட்டிகளை பார்த்த போது தான் எனது கவனத்திற்கு வந்தது. என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர் உடைய உருவப்படங்கள் இல்லை.

 அதே நேரத்தில், இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு 2011ல் ஜெயலலிதா 3.72 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அப்போது பொது பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், அதை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கினார். இந்த பணிகளை துவங்கிய நேரத்தில் தூங்குவதற்கு அவர்கள் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள்.

ஆகவே, அவர்களது படங்களும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். நான் விழாவை புறக்கணிக்கவில்லை. அங்கு செல்ல வில்லையே தவிர, அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டு குழுவின் கவனத்திற்கு சொல்லி இருக்கிறேன் என்றார்.

Tags:    

Similar News