பவானி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) ஆய்வு செய்தார்.;
பவானி நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, பவானி நகராட்சி வார்டு எண் 25 கல் தொழிலாளர் வீதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அம்ரூத் திட்டத்தின் கீழ் செயல்படும் இத்தொட்டியிலிருந்து சுமார் 821 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நாள்தோறும் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, கடை கோடி வீடு வரை குடிநீர் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து வீடுகளுக்கும் சரிவிகிதமாக குடிநீர் சென்றடைய குழாய் கட்டமைப்பினை உறுதி செய்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் வால்வுகள் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை ஆய்வு செய்து ஒவ்வொரு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் நிலை மற்றும் விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பவானி நகராட்சி ஆணையாளர் மோகன் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.