மொடக்குறிச்சி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-02-18 14:30 GMT

மொடக்குறிச்சி பேரூராட்சி, வார்டு எண் 9, தூரபாளையம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

மொடக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.18) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.27 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களையும், மாணவ, மாணவியர்களின் கழிப்பறை ஆகியவற்றினை அவர் பார்வையிட்டு, மாணவ, மாணவயிர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.


தொடர்ந்து, முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி, முத்துகவுண்டன்பாளையத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் வீதம் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளியிடம் கலந்துரையாடினார். மேலும், பெரியார் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, திட்டத்தின் பயன்கள் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி சின்னியம்பாளையம் ஊராட்சி ஏடி காலனியில் ஊரக குடியிருப்புகள் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 16 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கண்ணாங்காட்டுமேடு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், நஞ்சை ஊத்துக்குளி அம்மன் நகர் குக்கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதனையடுத்து, பள்ளக்காட்டுப்புதூர் கிராமம் கணபதிபாளையம் வீதியில் ரூ.11.89 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் நஞ்சை ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மொடக்குறிச்சி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் 96 கடைகளுடன் வாரச்சந்தை கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, தூரபாளையம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இச்சுத்திகரிப்பு நிலையத்திற்கு 6 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 8 வார்டுகளுக்கு உட்பட்ட சுமார் 2200 வீடுகளில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்த ஆய்வுகளின் போது, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சண்முகபிரியா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News