அந்தியூரில் வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக பணம் பெற்று தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மாயம்.?

அந்தியூரில் வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக பணம் பெற்று தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரின் வீடு, அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2025-02-18 13:00 GMT

பைல் படம்.

அந்தியூரில் வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக பணம் பெற்று தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரின் வீடு, அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 5 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து வந்தார். முன்னதாக கடந்த ஒரு வருடமாக இந்த அறையில் ஒரு வாலிபரை அவர் தங்க வைத்து இருந்தார்.

இதையடுத்து, அவர் அந்தியூர் பவானி ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து அதில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். இங்கு டிரேடிங் பாரின் கரன்சி முறையில் எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி வந்தார். பொது மக்களை அவர் சந்தித்து தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் வெளி நாடுகளில் முதலீடு செய்து பல மடங்கு பணம் உங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என கூறி மூளை சலவை செய்தார்.

இதை தொடர்ந்து, அவர் கூறுவது உண்மை என நம்பி அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் இவரிடம் பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொது மக்கள் பலரிடம் அவர் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பெற்றிருப்பதாகவும், இதனால் சுமார் ரூ.1 கோடி வரை அவர் வசூல் செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, இந்த நபர் தற்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலுவலகம் திடீரென மூடப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவரிடம் பணம் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தொடர்பு கொள்ளவும் முடிய வில்லை. மேலும் அவர் குடி இருந்த வீடும் கடந்த 3 மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தினமும் காலை நேரத்தில் பணம் கொடுத்தவபர்கள் வந்து பார்த்து சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் தங்கி இருந்த வீடும் தற்போது பூட்டப்பட்டு இருப்பதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை திறக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இதை தொடர்ந்து அவர் தங்கி இருந்த வீட்டில் உரிமையாளர் மேலும் பூட்டு போட்டு அவர் எப்போது வருவார் என கண்காணித்து வருகிறார்.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள், பணம் செலுத்திய நபர்கள் எந்த அடிப்படையில் காவல் துறையில் புகார் கொடுப்பது. என்ற குழப்பத்தில் இதுவரை யாரும் புகார் கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதே போல் இந்த நபர் கோவையில் ஏமாற்றி இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். தற்போது அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு உள்ளார் என்ற எந்த விபரமும் தெரிய வில்லை என மக்கள் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு யார் அந்த நபர்? எவ்வாறு அந்த நபர் மக்களை ஏமாற்றினார். என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News