மதுவால் மக்களை சீரழித்தது திமுக: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் புகார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தி மதுவை கொண்டு வந்து தமிழகத்தை சீரழித்தவர் என அதிமுக குற்றச்சாட்டு;

Update: 2023-02-08 11:15 GMT

ஈரோடு பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற  அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தி மதுவை கொண்டு வந்து தமிழகத்தை சீரழித்தவர் என்று முன்னாள் அமைச்சரும், ஈரோடு அதிமுக மாநகர் மாவட்ட செயலர் கே. வி.ராமலிங்கம் குற்றம் சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அறிமுக கூட்டம் ஈரோடு பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில்,  1972ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றி பெற்றார். அதே நிலை இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ். தென்னரசு உருவாக்குவார். எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு என்று தான் பேசினோம். அப்போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மின் கட்டணத்தை நினைத்தால் ஷாக் அடிக்கிறது என்றார். ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை. தற்பொழுது அவர் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளார். இப்பொழுது மின் கட்டணத்தை கேட்டாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. உங்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் தொகுப்பையும் மக்களுக்கு ரேஷன்கடைகளில் வழங்கினார். அப்போது ஸ்டாலின் 1500 சேர்த்து மக்களுக்கு 5000 வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்த பிறகு ஆயிரம் மற்றும் கரும்பு வழங்குவதாக உறுதி அளித்தார்.

திமுக அரசு சொத்துவரி மற்றும் பால் விலை போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளது மக்களின் அன்றாட பிரச்னைகள் அதிகரித்துள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவே தென்னரசுவை வெற்றி பெற செய்து தேர்தலில் திமுகவுக்கு மக்கள் ஒரு பாடம் புகட்ட வேண்டும். கே.எஸ். தென்னரசுவை மக்கள் எளிதில் அணுகலாம். கூப்பிட்ட குரலுக்கு மக்களை தேடிச் சென்று அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பார். ஆனால் எதிர் முகாமில் உள்ள வேட்பாளரை பார்க்க கூட முடியாது. சென்னையில் தான் இருப்பார். அவரது மகன் கடந்த 20 மாதங்களில் 12 நாட்கள் மட்டுமே மக்களிடையே பணியாற்றினார்.

எனவே மக்களுக்கு உழைக்க ஆர்வமாய் இருக்கும் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற்ற செய்ய வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் வேதானந்தம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News