நாமக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
வெயிலின் கடுமையான தாக்கத்தால், ஜூஸ், ஐஸ்கிரீம் கடைகளில் மக்கள் கூட்டம்;
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கடும் வெப்பத்தின் தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து, பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த கொடூர வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடைகளுக்கு மக்கள் திரளாகச் சென்று அவற்றை வாங்கிப் பருகி தங்களது தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றனர்.
நாமக்கல் பஸ் நிலையம், பூங்கா சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, மோகனூர் சாலை மற்றும் கோட்டை சாலைகளில் ஏராளமான தள்ளுவண்டி கடைகளில் கம்மங்கூழ் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இவற்றில் கரும்பு ஜூஸ் கடைகளுக்கு அதிக அளவில் கூட்டம் அலைமோதுகிறது. கரும்பு ஜூஸ் விலை குறைவாக இருப்பதுடன், அதில் ஐஸ் கலந்து வழங்குவதால் ஜில்லென்று இறங்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், மக்கள் ஒருவர் இரண்டு அல்லது மூன்று டம்ளர்கள் வரை வாங்கிப் பருகுகின்றனர். கரும்பு ஜூஸ் மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைப்பதால், இந்தக் கடைகளுக்கான மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் முழுவதும் இந்த கடைகள் நல்ல வியாபாரம் செய்யும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.