ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள் குவிந்தன.

Update: 2023-06-05 11:26 GMT

கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.


இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 312 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா  பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.


மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் காதொலி கருவியினையும், 1 பயனாளிக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

முன்னதாக, காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான 25-வது அகில இந்திய தடகள் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்து 15.02.2023 முதல் 19.02.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அமைப்பின் சார்பாக ஈரோடு மாவட்டத்தை சார்ந்த திரு.முகமது யாசின் என்ற மாற்றுத்திறனாளி கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் 8-வது மாநில அளவிலான காது கேளாதோர்களுக்கான நடைபெற்ற விளையாட்டுப் போட்டியிலும் முகமது யாசின் மற்றும் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் 2 தங்கம் மற்றும் 4 வெள்ளிப்பதக்கங்களை வென்றதையடுத்து, மாவட்ட கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News