பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

தர்மபுரி அருகே பத்திரம் பதிவு செய்ய விதித்த தடையை நீக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2021-08-31 16:30 GMT

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்த அன்னசாகரம் பகுதி மக்கள்.

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் பகுதியில் சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக இருதரப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். இதனால் இந்து அறநிலைய துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பிரச்சனைக்குரிய நிலம் என்பதால், பத்திரபதிவு செய்வதை நிறுத்தி வைக்க இந்து அறநிலைய துறை  ஆணையர் பதிவு துறைக்கு கடிதம் வழங்கியுள்ளார். இதனால் சுமார் 340 குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் இந்து அறநிலைய துறை உதவி ஆணையரிடம் முறையிட்டு மனு அளித்துள்ளனர். ஆனால் அன்னசாகரம் பகுதியில் பலகோடி மதிப்பிலான கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, கோபு என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்து அறநிலைய துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் கோபு கோவில் நிலங்கள் மற்றும் சாலையை போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா பெற்றுள்ளார். தருமபுரி நகராட்சி அன்னசாரம் பகுதியில் சுமார் 340க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு மற்றும் அரசு நிதியுதவி திட்டங்களும் வழங்கபட்டுள்ளது. இதற்கான பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன் தருமபுரி வட்டாட்சியர் விசாரணை செய்து, எந்த முறைகேடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாங்கள் நூறாண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது எனக் கூறி, தற்போது பத்திரப் பதிவு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ளோம். ஆனால் பத்திரப் பதிவுக்கு தடை தொடர்கிறது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து இந்து அறநிலைய துறையினர் செவி சாய்க்கவில்லை.

எனவே பத்திரப் பதிவுக்கான தடையை இந்து அறநிலைய துறை நீக்க வேண்டும். மேலும் கோபு மற்றும் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் 200-க்கு மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். தொடர்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனுவை தனி ஆட்சியா் (சமூக நலத்துறை) சாந்தி மற்றும் வருவாய்துறை அதிகாாிகள் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தொடர்ந்து ஒரே சமயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வந்ததால், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

Similar News