கோவை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்; மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கைது

கோவையில் கலெக்டர் அலுவலகம் முன், பணி நிரந்தரம் , அரசு நிர்ணயித்த கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-03 17:39 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள்.

கோவை கலெக்டர் அலுவலகம் முன், பணி நிரந்தரம், அரசு நிர்ணயித்த கூலி  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை  மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை, கைது செய்தனர்.  போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த  சம்பளத்தை வழங்க வேண்டும்.  ஒப்பந்த தூய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும், கோவை மாவட்ட தூய்மை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக, தூய்மை பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன் குவிந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகம் முன் திரண்டுள்ள தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு, ஒலிபெருக்கி மூலம்  போலீசார் அறிவுறுத்தினர். கலைந்து செல்லாவிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். ஆனால், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் பகுதியில், பரபரப்பான சூழல் உருவானது.

சிஐடியு, அருந்ததியர் முன்னேற்ற கழகம் ,தமிழ்நாடு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம், ஜனசக்தி லேபர் யூனியன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் லேபர் யூனியன், சமூக நீதி தூய்மை பணியாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், கோவை மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் உட்பட 9 தூய்மை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு விடுவதால்,  ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணிக்காக கலெக்டர் அலுவலகம் முன்  நிறுத்தப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள்  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் தொழிலாளர்கள் கைதாக மறுத்த நிலையில் , இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News