வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
Coimbatore News- கோவை வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
Coimbatore News, Coimbatore News Today- கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான உப கோவிலான அருள்மிகு கரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், தற்காலிக தினக்கூலி அர்ச்சகராக ஸ்ரீவத்சாங்கன் (40) என்பவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த இவர், வடவள்ளி பகுதியில் தங்கியிருந்து பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23 ம் தேதியன்று இந்து சமய அறநிலை துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்தில் உள்ள நகைகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டு மணிகள் திருடப்பட்டு இருப்பதும், அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையாளர் ஹர்ஷினி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகைகளை திருடியதும், திருடப்பட்ட நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் விற்று பணத்தை வாங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தங்கம் ஜுவல்லரியின் உரிமையாளரை வரவழைத்து அந்த14 கிராம் தங்கத்திலாலான தாலி மற்றும் குண்டு மணிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் மீது கடந்த ஆண்டு புதுப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் எட்டு கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதற்காக புழல் ஜெயிலில் 60 நாள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.