தங்கநகை கையாடல் செய்த கடை ஊழியர் கைது

தங்க நகை கையாடல் செய்த, நகை கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-06 12:13 GMT

நகைகளை கையாடல் செய்த, நகைக்கடை ஊழியர் கைது

நகைக்கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யாமல், 6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க நகைகள், ஆபரணங்களை கையாடல் செய்த, கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, 25 ஆண்டுகளாக 'அன்மோல் ஜுவல்லரி' உள்ளது. தமிழகத்தில் பிரபலமான  நகைக்கடைகளுக்கு, தங்க நகை ஆபரணங்கள் தயாரித்து, மொத்த விலையில், அல்மோன் ஜுவல்லரி விற்பனை செய்து வருகிறது. இந்த ஜுவல்லரியில், மார்கெட்டிங் மேனேஜராக ஊழியராக பணியாற்றியவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. பெங்களூருவில் உள்ள மொத்த வியாபார நகைக்கடையான அன்மோல் ஜுவல்லரியிலிருந்து நகைகளை கோயம்புத்தூரில் இயங்குகின்ற நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வது இவரது பணி.

பெங்களூருவில் தயாரிக்கப்படும் நகைகளை பத்திரமாக கொண்டு வந்து, ஆர்டர்கள் பெறப்பட்ட நகை கடைகளில் ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பெங்களூருக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனை குறித்து கவனிப்பது இவரது பணி. இந்நிலையில், கடந்த 10-08-2022 முதல் 12-09-2022 வரை பெங்களூருவிலிருந்து நகைகளை, கோயம்புத்தூருக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்தவர்,  நகைகளை ஆர்டர்கள் தந்த நகை கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை.

இந்நிலையில், அன்மோல் ஜுவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி, விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை மற்றும் நகைகளின் வினியோகம் குறித்தும் விளக்கம் கேட்டபோது, அனுமன் துவேசி முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அல்மோன் ஜுவல்லரி கடை உரிமையாளர் காட்ரிக்கு, அனுமன் துவேசி  நகை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுவரை, அன்மோல் ஜூவல்லரி நிறுவனத்தில் இருந்து, அனுமன் துவேசியிடம் கொடுத்து விடப்பட்ட நகைகளின் விவரங்கள் மற்றும் அவர் நகை கடைகளுக்கு வினியோகம் செய்த விவரங்கள் குறித்த ஆவணங்களை சரிபார்த்த போது, நிறைய நகைகளை, அவர் வினியோகம் செய்யாமல் நிர்வாகத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.

இந்நிலையில், 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி மதிப்பிலான தங்கம் கையாடல் செய்ததாக, வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து, நகை கையாடல் குறித்து புலன் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், நகைக்கடை ஊழியர் அனுமன் துவேசி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரை தேடி, தனிப்படை போலீஸார் தீவிர புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர். நகை கையாடல் நடந்தது திட்டமிட்ட சதியா அல்லது எப்படி நடந்தது என்பது குறித்து, போலீசாரின் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.

Similar News