ஊரடங்கு நீட்டிப்பு வெளியாகும் போது பள்ளிகள் திறப்பு அறிவிப்பும் இடம் பெறும்
பள்ளிகள் திறப்பு விஷயத்தில் எவ்விதத்திலும் விமர்சனத்தை எதிர்கொள்ளாமல், மாணவர் நலனை முன்னிறுத்தியே முடிவு எடுக்கப்படும்
ஊரடங்கு நீட்டிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பும் இடம் பெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி எனும் புதிய திட்டத்தை விஞ்ஞானிகள் எம்.எஸ். சுவாமிநாதன், சௌம்யா ஸ்வாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
2002 முதல் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அறிவியல் பயிற்சி வழங்க உள்ளனர்.ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை, மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை. இயற்கை வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் எம்.எஸ். சுவாமிநாதன்.
தமிழ்நாடு அரசும் வேளாண் துறைக்கு என தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. சிஎஸ்ஆர். நிதி மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நன்றி. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையில் செயல்படுகிறது. அந்தந்த மாநில மக்களின் மனநிலைக்கேற்ப தான் அந்தந்த அரசுகள் முடிவெடுக்க முடியும். கொரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு விஷயத்தில் எந்தவிதத்திலும் விமர்சனத்தை எதிர்கொள்ளாமல், மாணவர்களின் உடல்நிலையை பாதிக்காமல் தான் முடிவெடுக்க முடியும். அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார். நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெறும்.
மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டியது அவசியமில்லை. நாங்கள் பள்ளிகளைத் திறந்திருக்கிறோம். வரவேண்டியவர்கள் வரலாம் என்றார்.6,7,8-ம் வகுப்பு மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களை விஞ்ஞானிகளாக மாற்றும் திட்டம்.
முதற்கட்டமாக சமூக - பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பலரும் என்னிடம் பள்ளிகள் திறப்பு பற்றி கேட்கும் போது சௌம்யா சுவாமிநாதனின் வரிகளை குறிப்பிட்டு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆன்லைன் வகுப்புகள் மூலம் என்னதான் தொழில்நுட்பங் களை பயன்படுத்தி கற்றுத் தந்தாலும், ஓர் ஆசிரியர் நேரில் சொல்லித் தருவதைப் போல் கற்பித்தல் பணி இருக்காதுமாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது அவசியம் என்ற சௌம்யா சுவாமிநாதனின் கருத்து மிகவும் சரியானது. பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தாலும், அவர் சென்னையில் தான் இருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 1989 ஆண்டு அரசாணை வெளியிட்டு, ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான்என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
நிகழ்ச்சியில், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பேசியதாவது: Every Child A Scientist திட்டம் புதுமையான, அவசியமான திட்டம்.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எது நல்லது? எது கெட்டது? என்பதை பிரித்தறியும் அடிப்படை உள்ளுணர்வு உண்டு.அடிப்படை உள்ளுணர்வை அறிவியலுடன் இணைத்து பயணித்தால், சிறப்பான தமிழ்நாடு, சிறப்பான இந்தியா, சிறப்பான உலகை உருவாக்கலாம் என்றார் அவர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் துணை தலைவர் விஞ்ஞானி மதுரா சுவாமிநாதன் பேசியதாவது: இந்தியாவுக்கு இது மிக முக்கியமான நேரம். அறிவியலை உருமாற்றம் செய்ய வேண்டும்.அறிவியல் பற்றிய வதந்திகளால் தேசத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.அறிவியல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நமக்கு விவசாயமும் முக்கியம் என்றார்.
இன்றைய காலகட்டத்தில் நமது தேவைகள் மாறுபட்டுள்ளன. கொரோனா பேரிடர் காரணமாக செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் அறிவியலே இடம்பெற்று வருகிறது. கொரோனாவை பற்றி நாம் இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் அறிவியலைப் படிக்க வேண்டும்.பேரிடர் காலத்தில் பல தவறான தகவல்கள் இணையதளத்தில் பரப்பப்பட்டன.சமூக வலைத்தளம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வருகின்றனர். கொரோனா தடுப்பூசிக்கு எதிராகவும் தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன. உண்மைக்கும், பொய்க்கும் இடையேயான வித்தியாசத்தை மாணவர்களும், பொதுமக்களும் அறிவியலைப் படிப்பதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம்.பலருக்கு நெட்வொர்க் பிரச்சனையால் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படவில்லை.ஆனால் அதை ஒரு ஆப்ஷனாக வைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் பள்ளிகளை விட மால்கள் பிற பொது இடங்களுக்கு செல்வதால் தான் சமுதாயப் பரவல் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர்
பள்ளிக்கு செல்வதால் தான் கொரோனா பரவுகிறது என்பது தவறான தகவல்.Pfizer உள்ளிட்ட 2 வகையான தடுப்பூசிகள் தான் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 68% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்துள்ளது.இதன் காரணமாக மக்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்தால், 3-வது அலை ஏற்படாமல் கட்டுக்குள் வைக்க முடியும்.வைரஸ் பற்றி நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.நோய்களுடன் தான் வாழ முடியும்.ஆனால் அதை கட்டுக்குள் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதில் உண்மையில்லை. WHO மூலம் பலமுறை இதை வலியுறுத்தி உள்ளோம்.18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால், தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதனால் பெரிதாக பாதிப்பு இருக்காது. வளர்ந்த நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள் ளன.கடந்த 20 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், மலைவாழ் பகுதிகளில் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை. தமிழ்நாட்டில் Digital Connectivity சற்று முன்னேறி இருந்தாலும், Network Connectivity உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இன்னும் நீடிக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் சௌம்யா சுவாமிநாதன்.