சத்தீஷ்கர் மாநிலத்தில் ரூ.508 கோடி மோசடி: பிரதமர் மோடி அதிர்ச்சி தகவல்

சத்தீஷ்கர் மாநிலத்தில் ரூ.508 கோடி மோசடி நடந்திருப்பதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-13 10:13 GMT

பிரதமர் மோடி.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதற்கு முன்னதாக தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் இரண்டு கட்டமாகவும் மற்ற மாநிலங்களில் நவம்பர் 17 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இரண்டு கட்ட தேர்தல் நடைபெறும் சத்தீஷ்கர் மாநிலத்தில்  ஏற்கனவே கடந்த ஏழாம் தேதி முதல் கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள  70 தொகுதிகளில் வருகிற 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்கும் முனைப்பில்  பாரதீய ஜனதாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தற்போது  பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், முங்கேலியில் நடைபெற்ற தேர்தல்  பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

சத்தீஷ்கரில் காங்கிரசின் கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக உங்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்களுக்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் இருந்து காங்கிரசுக்கு விடைகொடுக்க மக்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். காங்கிரசை பொதுமக்கள் விரும்பவில்லை.

மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் 508 கோடி ரூபாய் மதிப்பில் மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் ஏராளமான பணத்தை மீட்டுள்ளன. சத்தீஷ்காமுதல்-மந்திரியின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் முதல்-மந்திரி எவ்வளவு பணம் பெற்றார் தலைமைக்கு எவ்வளவு பணம் சென்றுள்ளது என்பதையும் கூறவேண்டும்.

சத்தீஷ்காரில் முதற்கட்ட வாக்குப்பதிவை பார்க்கும்போது, சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்பது தெளிவாக தெரிகிறது. முதற்கட்ட தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News