அரசியல் சாசனத்தை மீறிய டெல்லி முதல்வர் அதிஷி: கெஜ்ரிவாலிற்காக காத்திருக்கும் நாற்காலி

அரசியல் சாசனத்தை டெல்லி முதல்வர் அதிஷி மீறி உள்ளார். கெஜ்ரிவாலிற்காக காத்திருக்கும் நாற்காலி பற்றி பாஜக விமர்சித்து உள்ளது.

Update: 2024-09-23 08:45 GMT
டெல்லி முதல்வராக பதவி ஏற்ற அதிஷி அருகில் காலியாக உள்ள நாற்காலி.

டெல்லி முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக நாற்காலியை காலியாக வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

தலைநகர் டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி அதிஷி மர்லினா இன்று திங்கட்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி  பொறுப்பேற்றவுடன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக முதல்வர் பதவிநாற்காலியை காலியாக வைத்திருக்கிறேன் என கூறிய  அதிஷி, தேர்தலுக்குப் பிறகு கெஜ்ரிவால் மட்டுமே இந்த நாற்காலியில் அமருவார் என்றும் கூறி உள்ளார். தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும், கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி முதல்வராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி தலவைர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் கெஜ்ரிவால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தக்கூடாது, தலைமை செயலகத்திற்கு செல்லக்கூடாது என கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதன் காரணமாக சிறையில் இருந்து வெளியே வந்ததும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பேசினார். அதில் பேசிய அவர் இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தான் கூறிய படி கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்து விட்டார்.

அவரது ராஜினாமாவை தொடர்ந்து அமைச்சரவையில் தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிஷியை முதல்வர் பதவிக்கு கெஜ்ரிவால் தேர்ந்தெடுத்தார். இன்று காலை டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பின்னர் அதிஷி தனது கட்சி தலைமைக்கு விசுவாசத்தை காட்டும் வகையில் கெஜ்ரிவால் அமர்ந்திருந்த நாற்காலியை காலியாக வைத்திருப்பதாகவும், தான் அந்த நாற்காலியில் அமரப்போவது இல்லை என்றும், அந்த நாற்காலியில் தேர்தல் வெற்றிக்கு பின்னர் கெஜ்ரிவாலே மீண்டும் வந்து அமருவார் என்றும் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அதிஷி கூறுகையில், "ராமர் வனவாசம் சென்றபோது பாரத் ஜிக்கு இருந்த அதே வலி இன்று எனக்கும் உள்ளது. ராமரின் சிம்மாசனத்தை வைத்து அவர் ஆட்சி செய்தார். ராமர் நம் அனைவருக்கும் ஆதர்சமானவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர் காட்டிய பாதையில் சென்று டெல்லி மக்களுக்கு சேவை செய்தார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலை அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து டெல்லி மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்குவார்கள் என்று நம்புகிறேன். அதுவரை இந்த முதல்வர் நாற்காலி கெஜ்ரிவாலுக்காக காத்திருக்கும் என்று கூறி உள்ளார்.

அதிஷியின் இந்த செயலுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, இவ்வாறு செய்வது அரசியலமைப்பு, விதிகள் மற்றும் முதல்வர் பதவியை அவமதிக்கும் செயலாகும். இதன் காரணமாக  முதல்வர் மேஜையில் இரண்டு நாற்காலிகள் போட வேண்டும். அதிஷி ஜி, இது சிறந்த அனுசரிப்பு அல்ல என்று கூறி உள்ளார்.

மேலும் இந்தச் செயலின் மூலம் டெல்லி முதல்வர் பதவியின் கண்ணியத்தையும், டெல்லி மக்களின் உணர்வுகளையும் அதிஷி காயப்படுத்தியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதில், டெல்லி அரசை இப்படி ரிமோட் கண்ட்ரோலில் நடத்துவீர்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுப்பணித் துறை, மின்சாரம், கல்வி, வருவாய், நிதி, திட்டமிடல், சேவைகள், விஜிலென்ஸ், நீர் உள்ளிட்ட 13 துறைகளையும் அதிஷி வைத்துள்ளார். அதிக வேலைகள் செய்ய வேண்டிய துறை இது, எனவே, வரும் காலங்களில், பணியை மீண்டும் பெறுவதில் அவர்கள் சவால்களை சந்திக்க நேரிடும் என அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், அவரது அமைச்சரவையில் பதவியேற்றவர்களில் நான்கு வலுவான மற்றும் அனுபவம் வாய்ந்த சகாக்கள் உள்ளனர். இதில் கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் மற்றும் முகேஷ் அஹ்லாவத் ஆகியோரின் பெயர்கள் அடங்கும். சுல்தான்பூர் மஜ்ராவிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வான அஹ்லாவத், டெல்லி அமைச்சரவையில் புதிய முகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News