தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அதிமுகவின் இரண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2024-10-08 14:00 GMT

தளவாய்  சுந்தரம்.

அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பதவிகளிலிருந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நீக்கப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் தற்போது இருந்து வந்தவர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராகவும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும், மிகவும் அதிகாரமிக்கவராகவும் ஒரு காலத்தில் கருதப்பட்டவர்.

இவரை அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்தும் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக கட்சி வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து ஏற்கனவே முன்னாள் முதல்வரும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ பன்னீர்செல்வம் அடிமட்ட உறுப்பினர் உள்பட அனைத்து  பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் இப்போது எடப்பாடி பழனிசாமி அதிரடியாக மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்த அதுவும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரத்தை நீக்கி இருப்பது அதிமுகவில் மட்டும் அல்ல தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு  உள்ள தலைமை கழக அறிவிப்பில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு முரணாகவும் கழக சட்ட திட்டங்களுக்கு மாறுபடும் வகையிலும் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்தும் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என கூறப்பட்டு உள்ளது.

இது பற்றி விசாரித்த போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததாகவும் இதன் காரணமாகவே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் தளவாய் சுந்தரம் பாரதிய ஜனதாவில் இணைவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில் பாஜகவின் தமிழக பொறுப்பு குழு தலைவர் எச் ராஜா தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News