எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

வெள்ள நிவாரண தொகை தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-12-10 15:33 GMT

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசிடம் பேசி கூடுதல் நிதி ஒதுக்கி தருவாரா என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி விடுத்து  உள்ளார்.

சென்னையில் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் மிக்ஜாம் புயல் உருவானதன் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. முக்கிய சாலைகள் ஏரி போல் காட்சியளித்தன. வெள்ளநீர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கி சென்னை மாநகர மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி பலர் தங்களது வீடு வாசல்களை இழந்ததோடு மட்டுமல்லாமல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உட்பட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் இழந்தனர். வெள்ளப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ரூ. 6000 நிவாரண உதவித்தொகை மக்களுக்கு போதாது. அதனை பன்னிரண்டாயிரம்  ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ள நிவாரண நிதி மிகவும் குறைவாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள தனது நண்பர்களிடம் பேசி தமிழகத்திற்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதி வாங்கி கொடுப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News