கமல்ஹாசன் தி.மு.க.வின் ஊதுகுழல்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

கமல்ஹாசன் தி.மு.க.வின் ஊதுகுழல் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2023-12-10 17:07 GMT

செல்லூர் ராஜூ, கமல்ஹாசன்.

தி.மு.க.வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார். 

சென்னையில் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க. அரசுக்கு ஆதரவாக ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை” எனக் காட்டமாகக் கூறினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்தது. தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்து. பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் தகுதி இல்லை என ம.நீ.ம. பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்  “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு அனைத்துமே செய்துவிட்டோம் எனக்கூறிய அமைச்சர்கள் கடைசி வரை எதையுமே செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் முதலமைச்சரையும் ஏமாற்றிவிட்டனர். அமைச்சர்கள் சொன்ன பொய்களால் மக்கள் தங்கள் உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்துவிட்டனர். ஒரு எம்.பி. சீட்டிற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.வின் ஊதுகுழலாக மாறி உள்ளார் என்றார்.

Tags:    

Similar News