அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி ராஜஸ்தான் மாநில துணை முதல்வர்

அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-12-12 16:43 GMT

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் தியா குமாரி.

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் துணை முதல்வராகி உள்ளனர். இதில் அரச குடும்ப வாரிசான தியா குமாரி துணை முதல்வராகி உள்ள நிலையில் யார் அவர்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. அரியணை ஏறியது.

பா.ஜ.க. மொத்தம் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 115 தொகுதிகளை கைப்பற்றி அசத்தலான வெற்றி பெற்றது. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர்கள் சிலர் இந்த பதவிக்கு கண்வைத்து இருந்தனர். இதனால் முதல்வரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இன்று ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர், 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் வசுந்தர ராஜே சிந்தியா ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

மேலும் துணை முதல்வர்களாக பிரேம் சந்த் பைரவா மற்றும் தியா குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் தேர்வு என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் யாருடைய பெயரும் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கான ரேஸில் இல்லை. மாறாக பா.ஜ.க. மேலிடம் இவர்கள் 3 பேரையும் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் தான் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோரின் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இதில் தியா குமாரி என்பவர் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1971 ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி பிறந்தார். இவருக்கு தற்போது 51 வயது ஆகிறது. இவரது தாத்தா பெயர் மான் சிங் . இவர் தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜெய்ப்பூரை ஆண்ட கடைசி மகாராஜராக இருந்தார்.

தியாகுமாரியின் தந்தை பெயர் பிரிகேடியர் சாவாய் பாவனி சிங். 1971 ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் திறமையாக செயல்பட்டதாக இவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. தியாகுமரி கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் நரேந்திர சிங் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் பத்மநாபசிங் என்பவர் தான் தற்போது ஜெய்ப்பூரின் மகாராஜாவாக உள்ளார். இதற்கிடையே தான் கருத்து வேறுபாடு காரணமாக தியாகுமாரி தனது கணவரிடம் இருந்து கடந்த 2018 ல் விவாகரத்து பெற்றார்

இவர் கடந்த 2013ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். சாவாய் மத்போர் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராஜ்சாமண்ட் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானர். தற்போது மீண்டும் அவர் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை அவர் வித்யாதர் நகர் தொகுதியில் களமிறங்கி 71,368 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தியா குமரி அறக்கட்டளைகள் நடத்தி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, வாழ்வாதாரத்துக்கு தேவையான சுயதொழில் பயிற்சிகள் வழங்கி வருகிறார்.

மேலும் பல பல்கலைக்கழகங்களில் இருந்து கவுர டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதுதவிர ஹோட்டல், பள்ளி, தொண்டு நிறுவனங்களையம் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு துணை முதல்வராக பிரேம் சந்த் பைரவாவிற்கு 49 வயது ஆகிறது. இவர் துடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாபுலால் நகரை 35,743 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாகை சூடினார். இவர் இதற்கு முன்பு 2013 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News