‘ராமர் கோவில் பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தம் அல்ல’ உரிமை கேட்கும் காங்கிரஸ்

‘ராமர் கோவில் பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தம் அல்ல’ என மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கமல்நாத் பேசினார்.

Update: 2023-11-03 11:33 GMT

மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத் பேசினார்.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இதன் காரணமாக ஆட்சியை தக்க வைப்பதில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியில் அமர்வதற்கு காங்கிரஸ் கட்சியும் துடித்துக்கொண்டிருக்கின்றன. பொதுவாக இந்தியாவை பொறுத்தவரை தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கமான ஒன்று தான். அது மட்டும் அல்ல. வரலாறுகளை மாற்றி பேசுவதும் அவர்களுக்கு கை வந்த கலை.


அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் இப்போது தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி கையாண்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்படும் என ராமஜென்ம பூமி  தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ள நிலையில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு பாரதீய ஜனதாவிற்கு சாதகமாக இந்துக்கள் ஓட்டுக்களை அவர்கள் பக்கம் முழுமையாக திருப்பிவிடும் என்பதால் அதற்கு எதிர்வினையாற்ற காங்கிரஸ் புதிதாக ஒரு கருத்தை வெளியிட்டு உள்ளது. அது என்ன என்பதை பார்ப்போமா?

மத்திய பிரதேச தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருமான கமல்நாத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ.க. மட்டுமே உரிமை கோர முடியாது. அயோத்தி பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பையும் நாம் மறந்துவிட முடியாது. பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்காலிக ராமர் கோவில் பூட்டு போடப்பட்டிருந்தது. அந்த பூட்டை உடைத்தவரே ராஜீவ் காந்திதான். ஆகையால் வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. அயோத்தி ராமர் கோவில், பா.ஜ.க.வுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ள கோவில் அயோத்தி ராமர் கோவில். ஆனால் பா.ஜ.க.வோ தமது சொந்த சொத்தாக உரிமை கோர முயற்சிக்கிறது. இப்போது அரசாங்கத்தில் பா.ஜ.க. இருக்கிறது; அதனால் நிதி ஒதுக்கீடு செய்து ராமர் கோவிலை கட்டுகிறது, அவ்வளவுதான்.

இலங்கையில் சீதையின் கோவிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். நாட்டின் நம்பிக்கை, கலாசாரத்துக்கு சேவையாற்றுவது என்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் சீதை கோவிலை கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுதான் சீதை கோவில் கட்டுமானத்தை நிறுத்தியது. இந்துத்துவா, தீவிர இந்துத்துவா, மென்மை இந்துத்துவா என்பதற்கான வரையறையை நாம் சொல்ல முடியாது. மதநம்பிக்கை என்பது பின்பற்றி வருவதைப் பொறுத்தவரை; பிரசாரங்களால் வருவது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்த்வாராவில் 101 அடி உயர ஹனுமான் சிலையை நிறுவினேன். அதேபோல ரூ455 கோடியில் ஓம்கரேஸ்வர் கோவில் உள்ளிட்டவைகளை நிர்மாணித்தோம்.


1949-ல் பாபர் மசூதிக்குள் கடவுள் சிலைகள் வைக்கப்பட்ட போது சர்ச்சையாக வெடித்தது. அப்போது சர்ச்சையை கட்டுப்படுத்த தற்காலிக ராமர் கோவிலில் பூட்டுகள் பூடப்பட்டன. இந்தப் பூட்டுகளை உடைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்பது பல்லாண்டு கால கோரிக்கை. 1984-ம் ஆண்டு இதே கோரிக்கைக்காக ரத யாத்திரையும் நடந்தது. அப்போது சீக்கியர்களால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலை நிகழ்ந்ததால் ரத யாத்திரையும் ரத்து செய்யப்பட்டது. இந்திராவுக்கு பின் ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார். 

ராஜீவ் பிரதமராக இருந்த காலத்தில்தான் புகழ்பெற்ற ஷாபானு வழக்கு விவகாரம் பேசுபொருளாக இருந்தது. தலாக் சொல்லி தம்மை விவாகரத்து செய்த கணவரிடம் ஜீவனாம்சம் கோரி ஷா பானு தொடர்ந்த வழக்கு அது. அப்போது ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இத் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அழுத்தத்தை ஏற்று முஸ்லிம் பெண்களுக்கான ஜீவனாம்சம் தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தாக்கல் செய்தார். இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்த கொந்தளிப்பான தருணத்தில்தான் அயோத்தி ராமர் கோவில் பக்கம் கவனத்தை செலுத்தினார் ராஜீவ் காந்தி. 1986-ல் அயோத்தி ராமர் கோவில் பூட்டுகளை திறக்க கோரி போராட்டங்கள் நடந்தன. அப்போது இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கிறது காங்கிரஸ் என்பதை வெளிப்படுத்த அயோத்தி தற்காலிக ராமர் கோவில் பூட்டை உடைத்தது ராஜீவ் காந்தி அரசு. இதன் பின்னர்தான் அயோத்தி ராமர் கோவில் கட்டும் விவகாரம், பாபர் மசூதி இடிப்பு என அத்தனையுமே உத்வேகம் கொண்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக ரத யாத்திரை நடத்தியதும் இதன் பின்னர்தான். 1991-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தையே அயோத்தியில் இருந்துதான் தொடங்கினார் ராஜீவ் காந்து. அப்போது மத்தியில் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என வாக்குறுதி அளித்தார்.

பாபர் மசூதிக்கு பாதிப்பு ஏற்படாமல் ராமர் கோவில் கட்டுவோம் எனவும் தேர்தல் வாக்குறுதி தந்தவர் ராஜீவ் காந்தி. 1992-ம் ஆண்டு மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பின்னரான வன்முறைகள், உயிரிழப்புகள் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை தந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.

என்னதான் ராஜீவ் காந்தி பூட்டை உடைத்து ராமர் கோவில் கட்டுமான விவகாரத்துக்கு அடித்தளமாக இருந்தாலும் அறுவடை செய்வது பாஜகதான். அதனால்தான் இன்னமும் சத்தீஸ்கர், ம.பி. மாநிலங்களில் ராமர் வனவாசம் போன இடங்களுக்கு சுற்றுலா திட்டம், இலங்கையில் சீதை கோவில் என இந்துத்துவா கொள்கைகளை தூக்கிப் பிடிக்க முயற்சிக்கிறது. 2020-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நிகழ்வு நடந்த போது கமல்நாத், ஹனுமான் பிரார்த்தனை நடத்தியவர். அயோத்தி ராமர் கோவிலுக்கு 11 வெள்ளி செங்கல் அனுப்புவதாகவும் அறிவித்தவர் கமல்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News