முதல்வராகவே ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு செல்லும் பஜன்லால் சர்மா

முதல்வராகவே ராஜஸ்தான் சட்டமன்றத்திற்குள் செல்கிறார் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் சர்மா.

Update: 2023-12-12 16:25 GMT

பஜன்லால் சர்மா.

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அவர் உடனடியாக முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் பஜன்லால் சர்மா யார்? அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 101 தொகுதிகளில் வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த நிலையில் அசோக் கெலாட் முதல்வராக இருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியின் வேட்பாளர் இறந்ததால் 199 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. மொத்தம் 115 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர்களான அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், எம்.எல்.ஏ. பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தான் இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் வசுந்தர ராஜே சிந்தியா ஓரம் கட்டப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ராஜஸ்தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது பஜன்லால் சர்மா பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். மாறாக கட்சி பொறுப்புகள் மூலம் மாநிலத்தில் கட்சியை தொடர்ந்து பலப்படுத்தி வந்தார். 56 வயது நிரம்பிய பஜன்லால் சர்மா பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக 4 முறை பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நடந்து முடிந்த தேர்தலில் சங்கானீர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். இதன்மூலம் அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வான நிலையில் அவருக்கு முதல்வர் பதவி என்பது கிடைத்துள்ளது. இவர் மீது கட்சி மேலிட தலைவர்கள் நம்பிக்கை அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தான் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் முற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் முதுகலை படிப்பை முடித்துள்ளார். தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தனக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆண்டு வருமானம் என்பது 11.1 லட்சமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாளும் கட்சி பணியிலேயே கவனம் செலுத்தி வந்த களப்பணியாளர் என்பதால் தான் பஜன்லால் சர்மா தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News