திறந்த வெளியில் முட்டை, இறைச்சி விற்க தடை: ம.பி. முதல்வர் அதிரடி உத்தரவு

திறந்த வெளியில் முட்டை, இறைச்சி விற்க தடை விதித்து ம.பி. முதல்வர் மோகன் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2023-12-14 14:34 GMT

மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த ௫ மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் மிசோரம் மாநிலத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் மாநில கட்சிகளும் வென்றன.

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமல் பா.ஜ.க. தேர்தலை சந்தித்த நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்று முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அதிகம் பிரபலம் இல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மோகன் யாதவை முதலமைச்சராக அறிவித்தது பா.ஜ.க. இதனை தொடர்ந்து நேற்று போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்று உள்ளார்.

மத்தியபிரதேச முதல்வர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் மங்குபாய் சி. படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவதா மற்றும் ராஜேந்திரா சுக்லா ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நடா மற்றும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 11 மாநில முதலமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 

வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்ட யாதவ், தனது முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவரித்து உள்ளார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு அவருக்கு வாக்களித்த அசைவம் உண்ணும் மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கு அவர் தடை விதித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "உணவு பாதுகாப்பு விதிகளுடன் இணைந்த வழிகாட்டுதல்களின்படி திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதிக்க உணவுத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகளால் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

அதேபோல், அயோத்திக்குச் செல்லும் பக்தர்களை ராமர் கோயிலுக்குச் செல்லும் வழியில் மத்தியபிரதேச அரசு வரவேற்கும் என்றும், தெந்து இலை பறிப்பவர்களுக்கு ஒரு மூட்டைக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் புதிய பா.ஜ.க. அரசு முடிவு செய்து உள்ளது. அதேபோல் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மத்திய பிரதேச மாநிலத்தின் 55 மாவட்டங்களிலும் சைபர் தேசில் திட்டத்தை செயல்படுத்தி ஒற்றை சாளர வசதி மூலம் 'நாமந்தரன்' (பொது சொத்து உரிமை மாற்றம்) செய்ய அரசு முடிவு செய்து உள்ளது.

Tags:    

Similar News